சுதந்திரப்பறவைகள் அமைப்பிலிருந்த பெண்கள் திலீபனைப்பற்றி என்ன சொல்கிறார்கள்

விடுதலைப்புலிகள் அமைப்பில் பெண்களின் பங்கைப்பற்றி சிறிதேனும் தெரிந்தவர்கள், பெண்களை பொதுவெளியில் இயங்கச் செய்வதற்கு திலீபன் கொடுத்த ஊக்கத்தையும் ஆதரவையும் பற்றி அறியாமல் இருக்க மாட்டார்கள். புரட்சிகர தமிழீழ போராட்டத்தில் பெண்கள் பங்கெடுப்பதின் முக்கியத்துவத்தை திலீபன் உணர்ந்து செயற்பட்டது திகைப்பிற்குரியது. விடுதலைப்புலிகள் அமைப்பில் பெண்களின் பங்கு 1983-84 காலப்பகுதியிலேயே ஆரம்பமாகியது. திலீபன் 1987 செப்டம்பர் மாதம் 26ம் திகதி வீரமரணமெய்தினார். அதனால் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒருசில நூறு பெண்களுக்கே அவரை ஆழமாக அறியும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிலும் முதலாவதாக தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்த நூறு பெண்களுக்கு அவரைப்பற்றி அதிகம் அறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சுதந்திரப்பறவைகள் அமைப்பிலிருந்த பெண்களே அவரோடு நெருக்கமாக பொதுவெளியில் இயங்கினார்கள். இவர்களில் சிலர் திலீபனைப் பற்றி சொன்னவை கீழே. இப்போதும் உயிரோடுள்ளவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. வீரமரணம் அடைந்தவர்களின் இயக்கப் பெயர்கள் அப்படியே கையாளப்பட்டிருக்கிறது.

 

கோதை:

முதலாவது தொகுதி பெண்களின் பயிற்சி தமிழ்நாட்டில் ஆரம்பித்த அதே காலத்தில், பெண் விடுதலை அரசியலில் பங்கேற்க திலீபன் பெண்களை ஊக்கப்படுத்தினார். இது 1984 இறுதிப் பகுதியில் ஆரம்பித்துவிட்டது. ஒரு பெண்கள் வலைப்பின்னல் உருவாகி வந்தது. 1985இல் முதலாவது சுதந்திரப்பறவைகள் இதழ் வெளியானது. அப்போது பெண்கள் தமது சொந்த கருத்துக்களை சுதந்திரமாக அதில் எழுதி வெளியிட்டார்கள்.

 

திலீபன் எப்போதுமே கொள்கைகளைவிட உரையாடல் ஊடாகவும் செய்கையிலுமே எதையும் அணுகுவார். திலீபன் இருக்கும்வரை போராட்டத்தில் எனக்கு முழுநம்பிக்கை இருந்தது. அவரின் இறப்புக்கு பின்னர் எனது நம்பிக்கையில் தளர்வு ஏற்பட்டது. திலீபன் உண்ணாவிரதம் இருப்பததை நான் எதிர்த்தேன். ஏனெனில் அவரைப்போல ஒரு போராளியை நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் சந்திக்கவில்லை.

 

இசை:

நானே முடிவுகள் எடுத்து அதில் உறுதியாக இருந்தேன். இதற்கான தன்னம்பிக்கை என்னிடம் வளர்ந்ததற்கு திலீபனே காரணம். எங்களை சுதந்திரமாக சிந்திக்க அவர் ஊக்கப்படுத்தினார்.

 

நிலா:

ஆணாக இருந்தாலும் திலீபன் பெண்களுக்கு ஒரு தலைசிறந்நத முன்னோடியாக இருந்தார். பெண்களை இயங்கச் செய்ய அவர் பெரும் ஆதரவு வழங்கினார். சுதந்திரப்பறவைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட அவர் ஒருபோதும் குரலுயர்த்தி திட்டியதில்லை. பிரச்சனைகள் வரும்போது அதை எவ்வாறு வேறு வழிகளில் கையாளலாம் என்று கலந்தாலோசிப்பார். திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் எங்களில் சிலரை வந்து சந்திக்கும்படி அழைத்தார். ஆனால் எங்களுக்கு அவர் உண்ணாவிரதம் இருப்பதில் உடன்பாடு இல்லை. அதனால் நாங்கள் போகவில்லை. பின்னர் நாங்கள் போனபோது அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் இறந்துவிடுவார் என்றும் நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் போனபோது இனி நாங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று எங்களுடன் உரையாடினார். உங்களிடமே நான் இந்த வேலையை நான் விட்டுச் செல்கிறேன். நாங்கள் திட்மிட்டதன் வழியே நீங்கள் தொடர்ந்து செயற்பட வேண்டும்.என்று சொல்லிவிட்டு வழி மாறினால் வரும் ஆபத்துக்களையும் விளக்கினார்.

 

சுதா:

இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர், யாழினி 30 பெண்களை அரசியல்துறையில் வேலை செய்வதற்காக தெரிவு செய்தார். நாங்கள் யாழ்பாணத்திற்கு வந்து சேர்ந்ததும் எமக்கு பொறுப்பாளர் யாழினி அல்ல சீதாவே என்று அறிந்போது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. சீதா சுதந்திரப்பறவைகள் அமைப்பிலிருக்கவில்லை. அவர் களமுனைகளிலும் பங்கேற்கவில்லை. அவர் ஒரு பல்கலைக்கழக பட்டதாரி. ஆனால் அரசியல்துறையில் பணியாற்ற தெரிவுசெய்யப்பட்ட 30 பெண்களும் வன்னிக்காடுகளில் பல களமுனைகளை சந்தித்தவர்கள். அவர்களில் பலர் திலீபனால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். இப்பெண்கள் தமது பொறுப்பாளராக திலீபனால் பயிற்றப்பட்ட ஒருவரே இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

 

ஆரணி:

திலீபனின் வழிகாட்டலில் இயங்கிய முதல் தொகுதி பெண்களில் யாழினி இருந்தார். அவர் அரசியல்துறை யாழ்மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். யாழினியின் தொலைநோக்கும் சீதாவின் தொலைநோக்கும் வேறுபட்டிருந்தன. இதனால் சீதா யாழினியின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் தனது கருத்துக்களையே செயற்படுத்தினார். அக்காலத்தில் அரசியல்துறை ஒரு அரசியல் கட்சியாகவே பார்க்கப்பட்டதால் இப்பொறுப்புக்கு சீதாவே பொருத்தமானவர் என்று சிலர் கருதினார்கள். யாழினிக்கும் பாரதிக்கும் அவர்கள் சிந்தனையில் இயங்குவதற்கான இடத்தை கொடுத்திருந்தால் இருவரும் ஒரு பெரும் புரட்சியையே உருவாக்கியிருப்பார்கள். கல்வியிலேயே ஈடுபட்டிருந்த சீதாவுக்கு பெண்களின் சமூக தேவகளைப்பற்றிய ஆழமான அனுபவமும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் பற்றிய அறிவும் இருக்கவில்லை.

 

சுரபி:

நான் திலீபனின் மாணவிஎன்று மிதிலா பெருமையாக சொல்வார். நானும் ஒரு திலீபனின் மாணவியின் மாணவிஎன்று சொல்லிக்கொள்வேன். அப்படி சொல்வதே ஒரு சக்தியை கொடுப்பதாக உணர்வேன். திலீபனிடம் பயின்றவர்கள் பொறுப்பாளர்களை சந்திக்க போகும்போது தமக்கு கீழே பணி செய்பவர்களையும் அழைத்துச் செல்வார்கள். வருங்கால பொறுப்பாளர்களை வளர்த்தெடுக்கும் ஒருவழியாக இது கையாளப்பட்டது.