திலீபன் புரட்சி – எமது காலத்தில் மீண்டுமொரு சுதந்திரபறவைகள் இயக்கம்

திலீபன் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அவரின் வீரமரணத்தால் தமிழீழ மக்களின் துயரம் என்றுமில்லாதவாறு பொங்கியெழுந்தது. இதையே இன்று பெரும்பான்மை தமிழர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். இதைப் போலவே வேறும் ஒரு திலீபனின் சாதனை விடுதலைப்புலிகளின் வரலாற்றில் புதைந்துபோய் கிடக்கிறது.

 

திலீபனின் பிரபல வார்த்தைகளும் ஈழத்தமிழருக்கு தெரிந்ததே. மக்கள் புரட்சி வெடிக்கட்டும். தமிழீழம் அங்கு மலரட்டும்என்பதுவே அது. திலீபனின் மற்றைய சாதனை இவ்வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது. திலீபனின் வீரமரணத்திற்குப் பின்னர் நடந்த பல நிகழ்வுகள் திலீபனின் இச்சாதனையை பின்தள்ளிவிட்டது. இன்று வேறு ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். திலீபனின் தியாகத்தின் 30 ஆண்டுகள் நிறையும் இக்காலம் அவரின் வேலையை மீண்டும் முன்னெடுக்க மிகவும் பொருத்தமான காலமாக அமைகிறது.

 

திலீபனின் வாரத்தைகளில் சொல்வதானால் இச்செயற்பாடுகளின் குறிக்கோள், தனிமனித மட்டத்திலும் சமூக மட்டத்திலும் சோசலிச சமதர்மமும்எல்லாவித அடக்குமுறைகளையும்ஒழித்தலும். ஆகும்.

 

இதற்காக திலீபன் தேர்ந்தெடுத்த வழிகள், ‘ இயக்கமும் விடுதலைப்புலிகளின் மாணவர் இயக்கமுமாகும்”. காலப்போக்கில் சுதந்திரபறவைகள் ஒரு பத்திரிகை இதழாக மாற்றமெடுத்தது. மாணவர் இயக்கமும் அதன் புரட்சிகர செயற்பாடுகளை தொலைத்துவிட்டது. திலீபனின் காலத்தில் இவையிரண்டுமே வேகமும் சக்தியும் மிக்க அமைப்புக்களாக எல்லாவித அடக்குமறைகளுக்கும் எதிராக இயங்கின. இப்போராட்டத்தின் குறிக்கோள்கள் என்னவாக இருந்தன?

 

  1. தனிமனித உரிமைகளைவிட கூட்டுரிமைகளுக்கு முன்னுரிமை. இவ்வாறான ஒரு வாழ்க்கை முறையிலிருந்து சில சிந்தனைகள் இயல்பாக வெளிவரும்:

 

  • தனிமனித செல்வ செழிப்பை பறைசாற்றுவது இவ்வாழ்க்கை முறையில் அர்த்தமற்றதாகும். உதாரணமாக: பிரமாண்டமான விருந்துபசாரங்கள், திருமணங்கள் போன்றவை, தேவைக்கு மிஞ்சிய பிரமாண்டமான வீடுகள், உடைகள் போன்றவை, பிரமாண்டமான கோவில் மற்றும் ஏனைய சமயச் சடங்குகள்.

 

  • ஈழத்தமிழராக இருப்பதில் பெருமை கொள்வது. திலீபன் தனது செயற்பாடுகள் ஊடாக ஈழத்தமிழரை யாரென்று வரையறை செய்தார். இன்று இப்பொறுப்பு இளைய தலைமுறையிடம் உள்ளது. இவர்கள் இதுபற்றி உரையாடல் நிகழ்த்தி இதை தமதாக்கி கொள்ள வேண்டும்.

 

  • கருத்துள்ள வாழ்வு என்பது மற்றவர்களைவிட எம்மிடம் அதிகம் இருக்கிறது என்று காட்டிக்கொள்வது அல்ல. மாறாக ஈழத்தமிழரின் கூட்டுணர்விலேயே கருத்துள்ள வாழ்வு அமைகிறது.
  1. இந்த வாழ்க்கை முறையைப்பற்றி ஆழமான புரிந்தல் ஏற்படும்போது, விடுதலைப்புலிகள் அங்கத்தவர்களிடமும் அவர்களின் கீழியங்கிய சமூகத்திலும் நிலைபெற்ற ஒழுக்கமும் கட்டுப்பாடும் இயற்கையாகவே எம்மிடம் உருவாக்கும்.

 

  1. தனிமனிதராகவும் சமூகமாகவும் இழைக்கப்படும் எல்லாவிதமான அடக்குமுறைகளையும் களைதல். உதாரணமாக: சாதிய எண்ணங்களை ஒழித்தல், பெண்களுக்கு சக்தியளித்தல், மாற்று வலுவுள்ளவர்களுக்கு சக்தியளித்தல், தோலின் நிறத்துக்கு மகிமை கொடுக்கும் சிந்தனையை ஒழித்தல், பிரதேசவாதம் ஒழித்தல், மேற்குலக கலாசாரம் சிந்தனைகளை பெருமையாக நோக்குவதை ஒழித்தல், இந்துத்துவ சிந்தனைகளை ஒழித்தல் போன்றவை.

 

  1. உலகின் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுடன் கூட்டொருமையை வளர்த்தல்.